இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், நேற்று கோவா நேரு மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் எஃப்சி கோவா அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. இதையடுத்து, ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் கோவா வீரர் ஜாக்கி சிங்கின் க்ராஸை, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் டிஃபெண்டர் மிஸ்லவ் கோமார்ஸ்கி தடுக்க முயன்றார். ஆனால் அது அவரது காலில் பட்டு செல்ஃப் கோலாக மாறியதால் கோவா அணி முன்னிலை பெற்றது.
இதன்பின், 80ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஸ்ட்ரைக்கர் ஃபெரான் கோரோவை நார்த் ஈஸ்ட் வீரர் ஜோஸ் டேவிட் தள்ளிவிட்டதால், நடுவர் அவருக்கு ரெட் கார்ட் வழங்கியது மட்டுமில்லாமல், கோவா அணிக்கு பெனால்டியும் வழங்கினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஃபெரான் கோரோ கோலா மாற்ற, எஃப்சி கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் விளையாடிய 12 போட்டிகளில் ஏழு வெற்றி, மூன்று டிரா, இரண்டு தோல்வி என 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கோவா அணி தனது சொந்த மண்ணில் அடிக்கும் 100ஆவது கோல் இதுவாகும். இதன்மூலம், ஐஎஸ்எல் கால்பந்து வரலாற்றில் சொந்த மண்ணில் 100 கோல்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை எஃப்சி கோவா அணி படைத்துள்ளது. இதுமட்டுமின்றி, ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்ற தனது 100ஆவது போட்டியை கோவா அணி வெற்றியுடன் கொண்டாடியுள்ளது. மேலும், சொந்த மண்ணில் தனது 50ஆவது வெற்றியையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க:WWE போட்டிகள் ஃபிக்ஸிங் தான் ' - தி கிரேட் காளி பிரத்யேக நேர்காணல்!