ஜெர்மனி கால்பந்து அணியின் புகழ்பெற்ற வீரர் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். நடுகள வீரரான இவர், எதிரிணி வீரர்களை கோலடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்து பந்தை பெற்று, தனது அணியின் முன்கள வீரர்களுக்கு சப்ளை செய்வதில் வல்லவர். 2014 பிரேசிலில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்ஸியை கோலடிக்க விடாமல் டிஃபெண்ட் செய்தது இவர்தான்.
இதனால்தான் ஜெர்மனி அணி அந்தப் போட்டியில் வெற்றிபெற்று உலகக்கோப்பை தொடரை வென்றது. ஜெர்மனி அணிக்காக 121 போட்டிகளில் விளையாடி 24 கோல்களை அடித்த இவர், 2016ஆம் ஆண்டில்தான் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தாலும் தொடர்ந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் விளையாடிவந்தார்.
ஜெர்மனியின் பன்டஸ்லிகா கால்பந்துத் தொடரில் 2002 முதல் 2015வரை என 13 ஆண்டுகளாக பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி, ஒரு சாம்பியன்ஸ் லீக் பட்டம், எட்டு பன்டஸ்லிகா கோப்பை ஏழு ஜெர்மன் கோப்பைகளை வென்று தந்தார். பின் 2015 முதல் 2017 வரை இங்கிலீஸ் ப்ரீமியர் லீக்கில் பிரபல மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.