கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றன. ஏனெனில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ள நிலையில், இந்தப் பெருந்தொற்றின் ஆட்டம் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் ஸ்பேனிஷின் பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் லோரென்ஸோ சான்ஸ். கடந்த வாரம் கோவிட்-19 பெருந்தொற்று கண்டறியும் சோதனையில் சான்ஸிற்குப் பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மருத்துவம் பெற்றுவந்த லோரென்ஸோ சான்ஸ், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் ஃபெர்னாண்டோ சான்ஸ் (Fernando Sanz) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவர் லோரென்ஸோ சான்ஸ் இது குறித்து ரியல் மாட்ரிட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், "1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் அணியின் தலைவராக இருந்த லோரென்ஸோ சான்ஸ் இறப்பிற்கு, அவரது மனைவி மேரி லூஸ், அவரது பிள்ளைகளான லோரென்ஸோ, பிரான்சிஸ்கோ, ஃபெர்னாண்டோ, டயானா ஆகியோருக்கும், அவரது நண்பர்களுக்கும் ரியல் மாட்ரிட் கிளப் சார்பாகவும், இயக்குநர்கள் சார்பாகவும் எங்களது வருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவர் கோவிட்-19 பெருந்தொற்றினால் உயிரிழந்துள்ள சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19: ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்த சிஎஸ்கே!