மத்திய அமெரிக்க நாடான ஹுண்டூராஸின் மோட்டாகுவா, ஒலிம்பியா ஆகிய உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது. பரம எதிரிகளான இந்த இரு அணிகளும் மோதும் போட்டி என்பதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சூழலில் டெகுசிகால்பா நகரில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்திற்கு ஒலிம்பியா அணி வீரர்கள் பேருந்தில் வந்துகொண்டிருந்தனர்.
அச்சமயத்தில் மைதானம் அருகே இருந்த மோட்டாகுவா அணியின் 250க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒலிம்பியா அணி வீரர்கள் வந்த பேருந்தின் மீது கற்களை வீசியதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மேலும் இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஒலிம்பியா அணி வீரர்கள் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதிலும் கலவரம் மூண்டது. மேலும் போட்டியை காணுவதற்காக மைதானத்தில் குவிந்திருந்த இரு அணியின் ரசிகர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் கால்பந்து மைதானமே யுத்த களமாக காட்சியளித்தது. பின்னர் இந்த கலவரம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதையடுத்து மைதானத்தில் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றுவதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர்.
இந்த களவரத்தில் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த சிலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற கலவரம் கால்பந்து போட்டி என்பது ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் கால்பந்து போட்டிகளுக்கே அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்கள் தங்கள் அணிக்காக எதையும் செய்ய துணியும் குணம் கொண்டவர்களாகவும் உள்ளனர். மேலும் கால்பந்து ரசிகர்களிடையே அவ்வப்போது மோதல்களும் வெடிப்பது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த மோதல்கள் சில சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்துவது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது.