தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரொனால்டினோ கைது முதல் மாரடோனா மறைவு வரை...2020ஆம் ஆண்டின் கால்பந்தாட்ட நிகழ்வுகள் ஓர் பார்வை!

கரோனா அச்சுறுத்தலால் 2020ஆம் ஆண்டில் குறைந்த அளவிலான கால்பந்து தொடர்கள் மட்டுமே நடைபெற்று இருந்தாலும்கூட பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதிலும் ரொனால்டினோ கைது செய்யப்பட்டது, ஆண்டின் சிறந்த வீரராக லெவாண்டொவ்ஸ்கி தேர்வு செய்யப்பட்டது, டியாகோ மாரடோனா மறைவு எனப் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு கால்பந்து விளையாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்துப் பார்ப்போம்...

Football 2020 year ender
Football 2020 year ender

By

Published : Dec 28, 2020, 12:26 PM IST

2020 கால்பந்து ஓர் பார்வை

ரொனால்டினோ கைது :

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தவர் பிரேசிலின் ரொனால்டினோ. குழந்தைகள் தொண்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக, இவரும் இவரது சகோதரர் ராபர்டோவும் கடந்த மார்ச் 4ஆம் தேதி பராகுவே நாட்டிற்குச் சென்றனர். அப்போது போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாகக்கூறி, இவர்கள் இருவரையும் பராகுவே காவல் துறையினர் மார்ச் 6ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட ரொனால்டினோ

ஐஎஸ்ல் - ஏடிகே சாம்பியன் :

ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஆறாவது சீசன் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன் மூலம் ஐஎஸ்எல் தொடரில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற சாதனையையும் கொல்கத்தாவின் ஏடிகே அணி படைத்தது.

ஐஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஏடிகே

ஃபிஃபா விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு :

ஆண்டுதோறும் சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களை கௌரவிக்கும் ‘ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது’ வழங்கும் விழாவை, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக ஃபிஃபா அறிவித்தது.

ஃபிஃபா விருதுகள்

ரொனால்டோ சாதனை :

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. 35 வயதான இவர் இத்தாலியின் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்நிலையில், தனது விளையாட்டுப் பயணத்தில் ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7500 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டிய முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து மீண்ட நெய்மர்:

செப்டம்பர் 2ஆம் தேதி பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவக் கண்காணிப்பிற்கு உள்படுத்தப்பட்டார்.

நெய்மர்

அதன்பின் செப்டம்பர் 12ஆம் தேதி தான் கரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாக அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார்.

ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற லெவாண்டோவ்ஸ்கி :

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பன்டெஸ்லீகா, யுஇஎஃப்ஏ கால்பந்து தொடர்களில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2019-20ஆம் அண்டிற்கான சிறந்த வீரர், மிட் பீல்டர், ஸ்டிரைக்கர், கோல் கீப்பர், பயிற்சியாளர் ஆகிய விருதுகள் அக்டோபர் 2ஆம் தேதி வழங்கப்பட்டன.

ஃபிஃபா விருதை வென்ற ராபர்ட் லெவாண்டொவ்ஸ்கி

இதில் பெயர்ன் முனிச் அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, 2019-20ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் லீக், பன்டெஸ்லீகா உள்ளிட்டத் தொடர்களில் சிறப்பாக விளையாடியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கரோனாவை வென்ற ரொனால்டோ :

சமகாலக் கால்பந்து உலகில் மிக முக்கிய கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் கலந்துகொள்ள செல்லும்போது ரொனால்டோவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவிலிருந்து மீண்ட ரொனால்டோ

அதைத்தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்துதலில் இருந்தார். சுமார் 19 நாள்களுக்குப் பின், அவர் கரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார்.

ஐஎஸ்எல் தொடக்கம்:

ஐஎஸ்எல் சீசன் 7

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், நவம்பர் 20ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெற்றது. கடந்த சீசனின்போது ஒடிசா எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் புதிதாக ஐஎஸ்எல் தொடரில் அங்கம் வகித்தன. இதையடுத்து இந்த 2020-21ஆம் சீசனில் மேலும் ஒரு புதிய அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இடம்பெற்றது.

டியாகோ மாரடோனா:

டியாகோ மாரடோனா

சர்வதேசக் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் முக்கியப் பங்கு வகித்தவர் அர்ஜென்டினாவின் டியாகோ மாரடோனா. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதல் காரணமாக சிகிச்சைப் பெற்று முடித்து வீடு திரும்பிய மாரடோனா, நவ.25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபிஃபா விருது :

ஆண்டுதோறும் சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களை கௌரவிக்கும் ‘ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது’ வழங்கும் விழா, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற லெவாண்டோவ்ஸ்கி

இதையடுத்து நேற்று (டிச.17) காணொலி வாயிலாக நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை போலந்து நாட்டின் நட்சத்திர வீரர் ராபர் லெவாண்டோவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டது. அதேசமயம் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை இங்கிலாந்தின் லூசி புரான்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்டர் 19 உலகக்கோப்பை முதல் ஆஸி.,தொடர் வரை: 2020 கிரிக்கெட் ஓர் அலசல்!

ABOUT THE AUTHOR

...view details