இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடட் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணியின் லிஸ்டன் கொலகொ ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்திலும், பெரிரா 13ஆவது நிமிடத்திலும் கோலடித்து நார்த் ஈஸ்ட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன்பின் ஆட்டத்தில் வேகம் காட்டத் தொடங்கிய நார்த் ஈஸ்ட் அணிக்கு ஆண்டி கியாஃப் ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதற்கு பதிலடி தரும் வகையில் லிஸ்டன் கொலகொ ஆட்டதின் 40ஆவது நிமிடத்தில் மீண்டுமொறு கோலடித்தார். இதனால், முதல் பாதி ஆட்டத்தில் ஹைதராபாத் 3 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டதிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணிக்கு முகமது யாசீர் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்திலும், பெரிரி ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்திலும் கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தினர். ஆனால் மறுமுனையில் தங்களது மொத்த திறனையும் வெளிப்படுத்திய நார்த் ஈஸ்ட் அணியால் கடைசி வரை கோலடிக்க இயலவில்லை.
இதன்மூலம், தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய ஹைதராபாத் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது. நடப்பு சீசனில் புதிதாக அறிமுகமான ஹைதராபாத் அணி, 18 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, 12 தோல்வி, நான்கு டிரா என மொத்தம் 10 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: ஜாம்ஷெத்பூரை துவைத்தெடுத்த கோவா... ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி!