நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022இல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய கண்டங்களுக்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இதில், இந்திய அணி ஓமன் அணியுடனான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின், கத்தார், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் டிரா செய்தது.
இந்நிலையில், இன்று மஸ்கட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஓமன் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 33ஆவது நிமிடத்தில் ஓமன் வீரர் ஹோசின் -அல்- கசானி கோல் அடித்து அசத்தினார். அதன்பின், இந்திய அணி கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது.
இறுதியில், இந்திய அணி இப்போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் இரண்டாவது முறையாக தோல்வியுற்றது. இந்தத் தோல்வியின் மூலம், இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று டிரா, இரண்டு தோல்வி என மூன்று புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம், இப்போட்டியில் வெற்றிபெற்ற ஓமன் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
குரூப் ஈ பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே தகுதிச் சுற்றின் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறுவர். அந்தவகையில், இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது சந்தேகம்தான். இதனால், இந்திய அணி ஃபிபா உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.