லோசான் (சுவிட்சர்லாந்து): கால்பந்து வாரியங்களில் மூன்றாம் தரப்பின் தலையீடு காரணமாக பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பையும் (பி.எஃப்.எஃப்), சாடியன் அரசாங்கத்தின் தலையீட்டின் காரணத்தால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் (எஃப்.டி.எஃப்.ஏ) இடைநீக்கம் செய்வதாக உலக கால்பாந்து கூட்டமைப்பான ஃபிஃபா அறிவித்துள்ளது.
ஃபிஃபா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "லாகூரில் உள்ள பி.எஃப்.எஃப் தலைமையகத்தை அண்மையில் சட்டவிரோதமாக ஒரு குழுவினர் கையகப்படுத்தி, ஃபிஃபா நியமித்த ஹாரூன் மாலிக் தலைமையிலான குழுவை நீக்கிவிட்டு, சையத் அஷ்பக் உசேன் ஷாவிடம் பி.எஃப்.எஃப் தலைமையை ஒப்படைக்க வேண்டும் என்று முழக்கமிட்டுள்ளார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று பி.எஃப்.எஃப் அலுவலகம் தாக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்களை பி.எஃப்.எஃப் முன்னாள் தலைவர் சையத் அஷ்பக் உசேன் ஷாவும், அவரது குழுவினரும் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். ஆதலால் தான் தற்போது ஃபிஃபா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.