ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணி, கால்பந்து கிளப் அணிகளில் தலைசிறந்த ஒன்றாக திகழ்ந்துவருகிறது. தலைசிறந்த வீரர் மெஸ்ஸி விளையாடும் இந்த அணிக்கு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிரணி வீரர்கள் எத்தனை பேர் சூழ்ந்துகொண்டாலும் பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடி கோல் அடிப்பதுதான் பார்சிலோனாவின் ஸ்பெஷாலிட்டி. குறிப்பாக பார்சிலோனா அணி மிட் ஃபீல்டருக்கென பெயர் பெற்ற அணியாகத் திகழ்ந்தது.
இனியஸ்டா, புஸ்கட்ஸ், ஸாவி போன்ற மிட் ஃபீல்டர்கள் ஆட்டத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்வது மட்டுமின்றி, கோல் அடிக்கவும் உதவுவார்கள். பயிற்சியாளர் பெப் கார்டியாலாவின் கீழ் அந்த அணி 2008 முதல் 2012 வரை கோலோச்சி இருந்தது. 2015இல்தான் அந்த அணி இறுதியாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. அதன் பின் விளையாடிய நான்கு சீசனிலும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு ஒருமுறை கூட முன்னேறவில்லை.
2017இல் பயிற்சியாளர் வால்வர்டேவின் வருகைக்குப் பிறகு பார்சிலோனா அணி அட்டாக்கிங் முறையை கைவிட்டு டிஃபெண்டிங் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறது. இதனால், அவ்வப்போது பார்சிலோனா அணியின் மிட் ஃபீல்டர்கள் மந்தமாக செயல்படுவதால், அந்த அணியின் ரசிகர்கள் #SackValverde என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துவருகின்றனர்.
கடந்த லா லிகா தொடரில் 38 போட்டிகளில் மூன்று தோல்விகளை மட்டுமே சந்தித்த பார்சிலோனா அணி இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளிலேயே மூன்று தோல்விகளை அடைந்துள்ளது. இதுஒருபக்கம் இருக்க, பார்சிலோனா அணி லா லிகா, சாம்பியன்ஸ் லீக் ஆகிய தொடர்களில் சொந்த மண்ணில் எடுபடும் அவர்களது வெற்றி என்பது அவே போட்டிகளில் (எதிரணி மண்ணில்) வெற்றிபெற மிகவும் தடுமாறுகிறது. இனியஸ்டா, ஸாவி ஆகியோர் ஓய்வு பெற்றபின் தற்போதைய டி ஜோங், ஆர்தர் மேலோ ஆகியோர் அவர்களது வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை.
அதேசமயம் புஸ்கட்ஸ், ரகிடிச் ஆகியோர் தங்களது பழைய ஃபார்மையும் வேகத்தையும் இழந்துவிட்டனர். இன்டர் மிலன், டார்ட்மண்ட், சிலாவியா பிரெக் ஆகிய அணிகளுடன் பார்சிலோனா அணி நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய பார்சிலோனா இரண்டு வெற்றி, ஒரு டிரா என ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. அதில், சிலாவியா பிரெக் அணியுடனான அவே போட்டியில் பார்சிலோனா அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா மீண்டும் சிலாவியா பிரெக் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. சொந்த மண்ணில் கில்லியாக திகழ்ந்த அந்த அணி, நேற்றைய போட்டியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிலாவியா பிரெக் அணியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் பார்சிலோனா ஒவ்வொரு முறையும் பந்தை அவர்களிடம் தாரை வார்த்தது. இதுவரை 4-3-3 என்ற ஃபார்மேஷனில் விளையாடி வந்த அணி நேற்று புதியதாக 4-2-3-1 என்ற ஃபார்மேஷனில் விளையாடியது. சுவாரஸ் காயம் காரணமாக விலகியதால், க்ரீஸ்மேன் - ஆர்துரா விடால் - டெம்பளே ஃபார்வர்ட் வீரர்களாகவும், மெஸ்ஸி சென்டர் ஃபார்வர்ட் வரிசையிலும் விளையாடினர்.
left footed player க்ரீஸ்மேனை ரைட் விங்கில் விளையாட வைக்காமல் அவரை வால்வர்டே லெஃப்ட் விங் பொசிஷனிலேயே தொடர்ந்து விளையாட வைக்கிறார். நேற்றைய போட்டியிலும் அவர் அந்த பொசிஷனில் விளையாடியதால் மெஸ்ஸி, டெம்பளே உடன் இணைந்து பந்தை பாஸ் செய்து விளையாட சிரமப்பட்டார்.