தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'கார்ல்ஸ் குவாட்ராட் பயிற்சியின்கீழ் எனது ஆட்டம் முன்னேறியுள்ளது' - ராகுல் பெக்கே - ஐஎஸ்எல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்குத் திரும்புவோம் என பெங்களூரு எஃப்சி அணியின் நட்சத்திர வீரர் ராகுல் பெக்கே தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE: It's been upward learning curve under Cuadrat's coaching, says Rahul Bheke
EXCLUSIVE: It's been upward learning curve under Cuadrat's coaching, says Rahul Bheke

By

Published : Nov 28, 2020, 4:12 PM IST

கோவாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நடந்துவருகிறது. இதில் இன்று (நவ. 28) நடைபெறும் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டிக்கு முன்னதாக ஈடிவி பாரத்திற்குப் பேட்டி அளித்த பெங்களூரு அணியின் நட்சத்திர டிஃபென்டர் ராகுல் பெக்கே, இன்றையப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தங்களது வெற்றிப்பயணத்தை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் பெக்கேவின் சிறப்பு உரையாடல் இதோ...

கேள்வி: எஃப்சி கோவா அணியுடனான போட்டி குறித்த உங்களது கருத்து என்ன?

ராகுல் பெக்கே: எஃப்சி கோவாவுக்கு எதிரான ஆட்டம் கடினமான ஒன்றாகும். அவர்கள் ஒரு நல்ல அணி, அவர்கள் ஒரு திட்டத்துடன் வந்தார்கள். இருப்பினும் அப்போட்டியில் நாங்கள் முன்னிலையில் இருந்தோம். ஆனால் இறுதி நிமிடத்தில் நாங்கள் அவர்களைத் தடுக்கத் தவறியதால், எங்களது வெற்றியை இழந்தோம். ஆனாலும் எங்கள் அணி வீரர்களுடைய தனித்திறனையும், அவர்களது வலிமையையும் நாங்கள் பார்த்தோம்.

கேள்வி: எஃப்சி கோவாவுக்கு எதிரான 2018-19 இறுதிப்போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி கோப்பையை வெல்வதற்கு நீங்கள் அடித்த கோல் காரணமாக அமைந்தது. இதுவரை பெங்களூரு அணி வென்ற ஒரே ஐஎஸ்எல் கோப்பையும் அதுவே. அப்போட்டி குறித்த உங்களது கருத்து?

ராகுல் பெக்கே: அது ஒரு அற்புதமான தருணம். நான் எப்போதும் அணிக்கு எனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என எண்ணுபவன். அதிலும் எனது அணி கோப்பையைக் கைப்பற்ற நான் அடித்த கோல் காரணமாக அமைந்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாகும். அது என்றும் என் நினைவில் மறக்க முடியாத நிகழ்வாக நிலைத்திருக்கும்.

கோலடித்த மகிழ்ச்சியில் ராகுல் பெக்கே

கேள்வி: நீங்கள் பெரும்பாலும் ஃபுல் - பேக் (full-back) வீரராக இருக்கிறீர்கள். ஆனால் சமீப காலமாக நீங்கள் சென்டர்-பேக் (centre-back) வீரராகச் செயல்பட்டுவருகிறீர்கள். இந்த இரண்டில் நீங்கள் விரும்பும் இடம் எது?

ராகுல் பெக்கே: கால்பந்து விளையாட்டில் ஒவ்வொரு போட்டியின்போது அணி வீரர்களுடைய இடம் மாறிக்கொண்டே இருக்கும். ஏனெனில் அணியில் உங்களுக்கான இடம் எப்போதும் நிரந்தரமானவை அல்ல. மேலும் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப பயிற்சியாளர் எனது இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது பணி. நான் எப்போதும் எனது அணிக்குப் பங்களிப்பை அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் அணியில் எந்த இடத்தில் விளையாடினாலும் அது எனக்கு மகிழ்ச்சியே.

கேள்வி: கால்பந்து விளையாட்டிற்கு நல்ல உடற்தகுதி என்பது மிக அவசியம். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் பயிற்சி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கையில் இந்த ஐஎஸ்எல் தொடருக்கு நீங்கள் எவ்வாறு உங்களைத் தயார்ப்படுத்துனீர்கள்?

ராகுல் பெக்கே: இந்தக் கரோனா ஊரடங்கின்போது நாங்கள் எங்களது உடற்தகுதியைப் பொருத்தமாக வைத்திருக்க எங்களால் முடிந்தவற்றைச் செய்தோம். மேலும் அணியின் பயிற்சியாளர், உதவி ஊழியர்களின் ஆலோசனைகளுடன் நாங்கள் எங்களது வீடுகளிலேயே பயிற்சிகளை மேற்கொண்டோம். நாங்கள் எப்போதும் தொடர்பில் இருந்ததால், எங்களால் இதனைச் செய்ய முடிந்தது. மேலும் இந்த ஊரடங்கின்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். அப்படி இருக்கையில் நாங்கள் மட்டும் வெளியே சென்று பயிற்சி பெறுவது என்பது இயலாத ஒன்று. அப்படி இருந்தும் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பயிற்சியின் போது ராகுல் பெக்கே

கேள்வி: நீங்கள் 2017 முதல் பெங்களூரு எஃப்சியின் ஒரு பகுதியாக இருந்துவருகிறீர்கள். அதனால் ஸ்பானிஷ் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ராட்டின் கீழ் விளையாடிய உங்கள் அனுபவத்தைப் பற்றி கூறுங்கள்? அவரது பயிற்சியின்கீழ் உங்கள் விளையாட்டு எவ்வளவு மேம்பட்டுள்ளது?

ராகுல் பெக்கே: ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தனி பாணியும், தத்துவமும் உள்ளன. அதுபோலவே கார்லஸ் குவாட்ராட்டுக்கும் உள்ளது. மேலும் அவர் முதலில் பெங்களூரு அணியின் உதவி பயிற்சியாளராக இருந்து, தற்போது தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் புதிதாக எதையும் பழக வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர் எங்களிடம் என்ன எதிர்பார்ப்பார் என்ற யோசனை எங்களுக்கு முன்கூட்டியே இருக்கும். மேலும் அவரது பயிற்சியின்கீழ் எனது ஆட்டம் நாளுக்கு நாள் முன்னேறிவருகிறது.

பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் கார்ல்ஸ் குவாட்ராட்

கேள்வி: இந்திய அணி வீரர்கள் சுனில் சேத்ரி, உதந்தா சிங் ஆகியோருடன் இணைந்து நீங்கள் பெங்களூரு அணியில் விளையாடிவருகிறீர்கள். நீங்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடுவது எப்படி உள்ளது?

ராகுல் பெக்கே: நாங்கள் இந்தியா, பெங்களூரு அணியில் ஒன்றாக விளையாடுவதினால், எங்களுக்குள்ள புரிதல் நன்றாக அமைந்துள்ளது. அதனால் பெரும்பாலான நேரங்களில் அவர்களுடைய எண்ணங்கள், பதில் எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அது இத்தொடர் முடியும்வரை மட்டுமே. ஏனெனில் இத்தொடருக்குப் பின் நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த பயிற்சியாளர்களின் அறிவுரையை ஏற்று, அதனைப் பின்பற்றியே நடக்க வேண்டும்.

கேள்வி: இந்த ஐஎஸ்எல் சீசனின் வலிமையான அணிகளில் ஒன்றாக பெங்களூரு எஃப்சி உள்ளது. அதன்படி இந்த சீசனில் உங்களுக்கு கடுமையான நெருக்கடியைத் தரும் அணியாக எதைப் பார்க்கிறீர்கள்?

ராகுல் பெக்கே: இந்த சீசனில் எந்த அணியையும் அவ்வளவு எளிதாக மதிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களைக் கொண்டுள்ளது. இந்த சீசனுக்குத் தயாராக, அணிக்குப் போதிய நேரம் இல்லை என்றாலும், பெரும்பாலான அணிகள் சிறப்பாகவே செயல்பட்டுவருகின்றன. அதனால் இப்போதைக்கு சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று யோசிப்பதைவிட, மற்ற அணிகளை எவ்வாறு வெற்றிபெறுவது என்பதைச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:மரடோனாவுக்கு மரியாதை செய்யும் லா லிகா

ABOUT THE AUTHOR

...view details