கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் இன்று (நவ.25) நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கு முன்னதாக ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்த எஃப்சி கோவா அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கர் இகோர் அங்குலா, இன்றைய போட்டியில் கோவா அணி, மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றிப்பயணத்தை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இகோர் அங்குலாவின் பிரத்தேக உரையாடல் இதோ :
கேள்வி : பெங்களூரு அணியுடனான போட்டியின்போது இரண்டு கோல்களை அடித்து கோவா அணியைத் தோல்வியிலிருந்து மீட்டீர்கள். அதிலும் ஒரு கோலை உங்களது மார்பால் அடித்தீர்கள். அது தற்செயலாக நடந்ததா அல்லது உங்களுடைய சிறப்பான ஆட்டத்திறன்களின் ஒன்றா?
அங்குலா: என்னுடைய உயரத்திற்கு மேல் எழும்பிய பந்தை நான் எனது மார்புப்பகுதியைப் பயன்படுத்தி விளையாடுவதே சரியென நினைத்தேன். அதன் காரணமாகவே என்னால் அந்த கோலை அடிக்க முடிந்தது. மேலும் அணிக்கு இரண்டு கோல்களை அடித்தது, அச்சமயத்தில் நாங்கள் தோல்வியிலிருந்து மீள்வதற்கு உதவியது.
கேள்வி : இத்தாலி கால்பந்து ஜாம்பவான் இன்சாகி போன்று டிஃபென்ஸிவ் கோட்டின் பின்புறத்தில் நின்று விளையாடும் உங்கள் பழக்கத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்?
அங்குலா: டிஃபென்ஸிவ் கோட்டிற்குப் பின்னால் நின்று ஆட்டத்தைத் தொடங்குவது, எதிரணியினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அது உங்களுக்கு உதவியாக அமையும். மேலும் இன்றைய காலத்தில் கால்பந்து விளையாட்டின் அனைத்து விவரங்களும் முக்கியமானதாக உள்ளது. அதனால் நீங்களும் உங்களது தனித்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமானதாகும்.