கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து): ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து (Euro 2020) போட்டித் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து, செக் குடியரசு அணிகள் மோதின.
முதல் பாதியில் செக்
ஸ்காட்லாந்து ஹாம்ப்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சமபலம் வாய்ந்த ஸ்காட்லாந்து, செக் குடியரசு அணிகள் விளையாடிய நிலையில், முதல் பாதி முழுவதும் செக் குடியரசு அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஸ்காட்லாந்து வீரர்கள் மேற்கொண்ட அத்தனை கோல் முயற்சிகளையும் செக் வீரர்கள் அரணாக நின்று தடுத்தனர்.
ஸ்காட்லாந்து வீரர் ஆண்டி ராபட்சன் கொடுத்த அத்தனை முயற்சிகளையும் பாக்ஸில் இருந்த ஸ்காட்லாந்து முன்கள வீரர்கள் வீணடித்தனர். இந்நிலையில், ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் ஷிக்கின் அசத்தலான 'ஹெட்டர்'-ஆல் கோல் அடித்தார்.
ஷிக்கின் ஷாக்
முதல்பாதியில் ஸ்காட்லாந்து 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. இதனால் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்து ஸ்காட்லாந்து வீரர்கள் பல கோல் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆக்ரோஷமாக ஆடிவந்த ஸ்காட்லாந்துதான் கோல் அடிக்கும் என எதிர்பார்த்தநிலையில், ஸ்காட்லாந்த் தவறவிட்ட பந்தை நொடிப்பொழுதில் தன்வசமாக்கினார் ஷிக். ஸ்காட்லாந்தின் கோல் கீப்பர் மார்ஷல், கோல் போஸ்டிலிருந்து சற்று வெளியே வந்து நிற்க, 52ஆவது மைதானத்தின் பாதியிலிருந்து ஷிக் அடித்த ஷாட், ஸ்காட்லாந்தை அலறவைத்தது.
காற்றில் சிட்டாகப் பறந்த பந்து, கோல் போஸ்டுக்குள் புயலாக நுழைந்தது. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு முன்னிலை பெற்றது.
கடைசிவரை கதறல்தான்
ஸ்காட்லாந்து அணி பலமுறை முயன்றும் ஒரு கோல்கூட அடிக்க முடியாததால், ஆட்ட நேர முடிவில் செக் குடியரசு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனால், டி பிரிவில் செக் குடியரசு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: வெளியான சுரேஷ் ரெய்னாவின் 'பிலீவ்' புத்தகம்!