ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து (Euro 2020) தொடரின் இரண்டாவது ரவுண்ட் ஆஃப் -16 ஆட்டம் நேற்று(ஜூன்.26) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இத்தாலி அணி ஆஸ்திரியா அணியை எதிர்கொண்டது.
ஓவர் டைமில் இத்தாலி வெற்றி
ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க பகீரத முயற்சி செய்தும், ஷாட்கள் கோல்களாக மாறவில்லை. மொத்த ஆட்டத்தில் இத்தாலி அணி 27 ஷாட்களும், ஆஸ்திரியா 16 ஷாட்களும் அடித்தன.
ஆனால் ரெகுலர் டைமான 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. எனவே, ஆட்டம் கூடுதல் நேரம் எனப்படும் ஓவர் டைம்க்குச் சென்றது.
ஓவர் டைம் நேரத்தில் இத்தாலி அணி கோல் கணக்கைத் தொடங்கியது. அந்த அணி வீரர் ஃபெடெரிகோ சிசா 95 ஆவது நிமிடத்தில் அணிக்கு முதல் கோலை அடித்தார்.
பின்னர், 105ஆவது நிமிடத்தில் மற்றொரு வீரர் மேட்டியோ பெசினா இத்தாலிக்கு இரண்டாவது கோலை அடித்தார். 2-0 என இத்தாலி முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரிய வீரர் சாசா கலாஜ்ட்ஸிக் அணிக்கு முதல் கோலை அடித்து இத்தாலிக்கு நெருக்கடியைத் தந்தார்.
இறுதியில் 2-1 என்ற கணக்கில் இத்தாலி அணி போராடி வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுகல்-பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டியின் வெற்றியாளரை இத்தாலி காலிறுதியில் சந்திக்கவுள்ளது.
இதையும் படிங்க:யூரோ 2020: அபார வெற்றிபெற்று டென்மார்க் காலிறுதிக்கு முன்னேற்றம்