ஸ்பெயினில் உள்ள கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் லா லிகா கால்பந்து தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. நடப்பு சீசனில் ரியல் மாட்ரிட் அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஒரு தோல்விகூட பெறாமல் 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பார்சிலோனா அணியும் உள்ளன. நடப்புத் தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்தப் போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். இந்தச் சூழலில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள காட்டலான் பகுதி மக்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கூறி போராட்டம் செய்துவருகின்றனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எல் கிளாஸிகோ போட்டியின் பரபரப்பான தருணம் பிற அணிகள் மோதும் போட்டியைக் காட்டிலும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் போட்டி என்றால் கால்பந்து ரசிகர்களுக்கு சற்று அதிகமான எதிர்பார்ப்புதான். இந்த இரு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாஸிகோ என்றே அழைக்கின்றனர். காரணம் பரம எதிரிகளாகவே கருதப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் சமயங்களில் மைதானத்தில் வீரர்கள் மத்தியிலும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் இடையேயும் சண்டைகள் எழுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் மோதினால் எத்தனை பரபரப்பு இருக்குமோ அதற்கும் மேலான பரபரப்பு இந்த இரு அணிகளும் மோதும் சமயங்களில் ஏற்படுவதுண்டு.
கடந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா அணி கடந்த 90 ஆண்டாக நடத்தப்பட்டுவரும் லா லிகா தொடரின் நடப்பு சீசனில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில் ரியல் மாட்ரிட் அணி 33 முறையும் பார்சிலோனா 26 முறையும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி பிற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன. இந்த லா லிகா தொடரின் கடந்த சீசனில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.