கால்பந்து போட்டிகளில் கோல்கீப்பர்கள் சில தருணங்களில் பறவைகளாக பறந்து பந்துகளை தடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களின் மூலம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், எகிப்து நாட்டில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் போட்டியில் கோல்கீப்பர் முகமத் கத் களத்தில் சூப்பர்மேன் போல் மாறி பந்தை தடுத்துள்ளார்.
பறந்து பறந்து பந்தை சேவ் செய்த கோல்கீப்பர்! - கோல்கீப்பர்களின் சாகசங்கள்
எகிப்து நாட்டில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டியில் கோல்கீப்பர் முகமத் கத் பந்தை பறந்து பறந்து இரண்டுமுறை தடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
எகிப்து ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில், E.N.P.P.I - பிரமிட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் E.N.P.P.I அணி கோல்கீப்பர் முகமத் கத் 30ஆவது நிமிடத்தில், எதிரணி வீரர் அடித்த பந்தை ஓடி வந்து தலையால் தடுத்தார். இதையடுத்த 7 நொடிகளில் மற்றொரு பிரமிட்ஸ் வீரர் கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்தை மீண்டும் முகமத் கத் பறந்து தடுத்தார்.
அவரது இந்த செயலைக் கண்டு சக வீரர்கள் பாராட்டினர். பறந்து பறந்து இவர் கோல்கீப்பிங் செய்தும், இவரது அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரபல கால்பந்து வீரரும், வர்ணனையாளருமான கெரி லினெகர் தனது ட்விட்டர் பக்கத்தில் முகமத் கத்தின் கோல்கீப்பிங் திறமைகளை ஷேர் செய்துள்ளதால், அவரது 'சூப்பர்மேன் சேவ்' சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.