உலகளவில் கோவிட்-19 பெருந்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
ஸ்பெயினில், கடந்த 24 மணிநேரத்தில் 637 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களைப் பொறுத்தவரை, ஸ்பெயினில் மிகக் குறைவான உயிரிழப்புகள் நேற்று தான் பதிவாகியுள்ளன. இதுவரை, அந்நாட்டில் 13,341 உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளரானப் பெப் கார்டியோலாவின் தாயார் டோலர்ஸ் சாலா கோவிட் 19 தொற்றால் பார்சிலோனாவில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 82. கார்டியோலாவின் தாயார் உயிரிழப்புக்கு, மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாக வீரர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக, கோவிட்-19 பெருந்தொற்றால் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்குப் பெப் கார்டியோலா பார்சிலோனாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு, ஒரு மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமெரிக்கன் புரோ புட்பால் வீரர் பாபி மிட்செல் காலமானார்!