தென் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற குரூப் பி போட்டியில் அர்ஜெண்டினா அணி, கொலம்பிய அணியை எதிர்கொண்டது.
கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜெண்டினா தோல்வி! - Argentiana v Colambia
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இப்போட்டியில், அர்ஜெண்டினாவை விட கொலம்பிய அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டது. 77ஆவது நிமிடத்தில் கொலம்பிய அணிக்கு மாற்று வீரராக களமிறங்கிய ரோஜர் மார்டினஸ் சிறப்பாக கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதியில் களமிறங்கிய மற்றொரு மாற்று வீரரான துவான் ஸபாடா 86ஆவது நிமிடத்தில் கோல் அடித்து மிரட்டினார்.
இதனால், அர்ஜெண்டினா அணி இப்போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இப்போட்டியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக கோல் அடிக்காததால், அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, அர்ஜெண்டினா அணி தனது இரண்டாவது போட்டியில், பாராகுவே அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டி வரும் 20ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது.