தென் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று பி பிரிவில் நடைபெற்றப் போட்டியில் அர்ஜெண்டினா-கத்தார் அணிகள் மோதின.
கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் அர்ஜெண்டினா
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் நேற்றையப் போட்டியில், கத்தார் அணியை அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினா வீரர் லட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து கத்தார் அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தபோது, அதை அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, செர்கியோ அகுரோ ஆகியோர் தங்களது அபாரமான ஆட்டத்தால் தடுத்தனர்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின்போது, 82ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ கோல் அடித்தார். பின்னர் இறுதியில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம் அந்த அணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது. வரும் 28ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா, வெனிசுவேலாவை எதிர்கொள்கிறது.