கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி திகழ்ந்துவருகிறார். அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை பிரேசில் அணி வென்றது.
இந்தத் தொடரில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணிக்கு எதிரான அரையிறுதிச் சுற்றில் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது.
அதேசமயம், அப்போட்டியில் சிலி அணி வீரருடன் மோதியதற்காக மெஸ்ஸிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதன்மூலம், சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் மெஸ்ஸி இரண்டாவது முறையாக ரெட் கார்டு பெற்றார்.
போட்டி முடிந்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மெஸ்ஸி,
"பிரேசில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இத்தகைய ஊழல் நிலவும் இந்தத் தொடரில் நான் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன்" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, மூன்றாவது இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தையும் அவர் பெற மறுத்துவிட்டார். மெஸ்ஸியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிரேசில் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மெஸ்ஸியின் ஊழல் குறித்த கருத்துக்கு கோபா அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்ததுள்ளது. இதுமட்டுமல்லாது, சர்வதேச போட்டிகளில் அடுத்த மூன்று மாதம் விளையாடவும் அவருக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
பின்னர் தனது கருத்திற்காக, மெஸ்ஸி மன்னிப்பு கேட்பதாக கோபா அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்புக்கு கடிதம் எழுதினார்.
தனக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடையை எதிர்த்து மெஸ்ஸியும், அர்ஜென்டினா கால்பந்து நிர்வாகமும் மேல்முறையீடு செய்யலாம். ஒருவேலை, மேல்முறையீட்டில் மெஸ்ஸிக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையெனில் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் சிலி, மெக்ஸிகோ, ஜெர்மனி ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார்.
முன்னதாக, ரெட் கார்டு பெற்றதற்காக மெஸ்ஸிக்கு அடுத்த மார்ச் நடைபெறவுள்ள கோபா அமெரிக்கா தொடரில் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.