நடப்பு ஆண்டுக்கான ஐஎஸ்எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு எஃப்.சி. அணியை எதிர்த்து ஒடிசா எஃப்.சி. அணி ஆடியது. இதற்கு முன் பெங்களூரு அணி ஆடிய போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்ததால், பெங்களூரு அணி அதன் சொந்த மண்ணில் மீண்டும் வெற்றியைத் தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. மூன்றாவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை ஹெர்னாண்டஸ் சரியாக பயன்படுத்தி பெங்களூரு அணியின் பாக்ஸுக்குள் பந்தை கொண்டு செல்ல, அது பெங்களூரு அணி வீரர்களால் தடுக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு அணியின் பிரவுன், ஒடிசாவின் தடுப்பாட்டத்தைக் கடந்து 23ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இதையடுத்து அடுத்த 2 நிமிடத்தில் மீண்டும் பெங்களூரு அணியின் ராகுல் இரண்டாவது கோல் அடிக்க, ஆட்டத்தில் பெங்களுரூ அணியின் கை ஓங்கியது. இதையடுத்து ஒடிசா அணிக்கு ஆட்டத்தில் மீண்டும் உள்ளே வருவதற்கு கிடைத்த வாய்ப்பை மார்ட்டின் வீணடித்தார்.