கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக வலம்வருபவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2003ஆம் ஆண்டில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், தனது 18 வயதில் சர்வதேச கால்பந்து விளையாட்டில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை போர்ச்சுகல் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
அதேசமயம், ஸ்போர்டிங் சி.பி (போர்ச்சுகல்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய கிளப் அணிகளில் விளையாடி பல்வேறு கோப்பைகளையும் சாதனைகளையும் படைத்த இவர், தற்போது யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். தற்போது அவருக்கு 34 வயதானாலும் இளம் வீரர்களைப் போல விளையாடிவருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் போர்ச்சுகல் அணி 2016இல் யூரோ கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள யூரோ கோப்பைத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான போட்டியில் போர்ச்சுகல் அணி, உக்ரைனுடன் மோதியது. இதில், 72ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்தார். இதன் மூலம், சர்வதேச, கிளப் அளவிலான போட்டிகளில் 700 கோல்களை அடித்த ஆறாவது வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.