விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இதற்கிடையே இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.
இந்த சூழலில் பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் உடன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் பிரபல அணியான சென்னையின் எஃப்சி கைக்கோர்த்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் ஐஸ்வர்யா கல்பாத்தி, சென்னையின் எஃப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, தனபால் கணேஷ் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்களும் கலந்து கொண்டு உரையாடினர். பின்னர் இரு தரப்பினரும் தங்களின் அணியின் ஜெர்சிகளை மாற்றிக்கொண்டனர்.
இந்தக் கூட்டணி படத்தின் புரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டடுள்ளது. அதன்படி சென்னையின் எஃப்சி, ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து பிகில் ஃபிஃபா சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னை மற்றும் கொச்சியில் வரும் 25ஆம் தேதி நடத்துகின்றன. இந்தப் போட்டிக்கு 50,000 ரூபாய் பரிசுத் தொகை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது வரும் 22ஆம் தேதி சென்னையின் எஃப்சி கால்பந்து பள்ளியில் உள்ள குழந்தைகளை பிகில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி அணிகளுக்கு இடையே சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் போட்டியை அர்ச்சனா பிகில் கால்பந்து மகளிர் அணியுடன் நேரில் பார்க்கவுள்ளார்.
நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா கல்பாத்தி, சென்னையின் எஃப்சியுடன் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தையும், பெண்கள் முன்னேற்றத்தையும் பற்றி கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி கால்பந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் என நம்புகிறோம். இந்தாண்டு ஐஎஸ்எல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய சென்னையின் எஃப்சி துணைத் தலைவர் ஹைரன் மோடி, தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை சென்னையின் எஃப்சி அணி முன்னெடுத்துச் செல்கிறது. நாங்கள் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிகில் படம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றிபெறும். மேலும் இத்திரைப்படம் கால்பந்து விளையாட்டிற்கு அதிக ரசிகர்களை அழைத்துவரும் என நம்புகிறேன் என்றார்.