இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தாலும், சென்னை அணி ரசிகர்களுக்கு இந்த சீசன் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு முக்கிய காரணமே சென்னையின் எஃப்சியின் ஆட்டம்தான். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஃப்சி (சென்னையின் எஃப்சி) நடப்பு சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு டிரா, மூன்று தோல்வி என ஒரேயோரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருந்தது.
இதனால், மோசமாக சென்றுகொண்டிருந்த இந்த சீசனுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் விதமாக சென்னை அணி விளையாடியத் தொடங்கியுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. அட்டாக்கிங் முறையில் விளையாடிய சென்னை அணிக்கு கிடைத்த கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை ஹைதராபாத் கோல் கீப்பர் கமல்ஜித் சிங் தடுத்துநிறுத்தினார்.
ஆட்டம் 90 நிமிடங்கள் எட்டிய நிலையில், இரு அணிகளுக்கும் கூடுதலாக (Stoppage time) ஏழு நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில், 90 + 2 நிமிடத்தில் சென்னை வீரர் ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி கோல் அடிக்க, சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த கொண்டாட்டம் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.
ஹைதராபாத் அணிக்கு 90+5 நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் மூலம் அந்த அணியை சேர்ந்த மேத்யூவ் ஹெட்டர் முறையில் கோல் அடிக்க ஆட்டம் சூடிபிடித்தது. சென்னை ரசிகர்களின் முகமும் சோகத்தில் இருந்தது. ஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடத்தில் சென்னை அணியின் ஸ்ட்ரைக்கர் வால்ஸ்கிஸ் கோல் அடிக்க, ரசிகர்களும் சென்னை வீரர்களும் எண்ணற்ற மகிழ்ச்சியில் ஈடுப்பட்டனர். இதனால், சென்னையின் எஃப்சி அணி இப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சீசனின் சிறந்த கம்பேக் போட்டி என்று இந்தப் போட்டியை கூறலாம். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நான்கு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியின் இந்த ஃபார்ம் இந்த சீசன் முழுவதும் தொடருமா என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சென்னை அணி நாளை மறுநாள் தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் ஒடிசா அணியை எதிர்கொள்கிறது.