போர்டோ (போர்ச்சுகல்): ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நேற்று (மே,30) நடந்த இறுதிப் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி- செல்சீ அணிகள் மோதின.
இதற்கு முன் 2012ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில், பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) அணிக்கு எதிராக செல்சீ அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின்னர், இறுதிப்போட்டி பக்கமே தலை வைக்காத செல்சீ, ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதுவே மான்செஸ்டர் சிட்டி அணிக்கு சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் இறுதிப் போட்டியாகும். நேற்று நடந்த இறுதிப்போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணியே தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இப்போட்டியின் முழு நேரத்தில் 61 சதவிகித நேரம், பந்து மான்சஸ்டர் அணியிடமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், போட்டி நேர முடிவில் மான்செஸ்டர் ஒரே ஒரு கோல் கிக் முயற்சியை தான் எடுத்தது.