கொரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நடப்பு சாம்பியன் லிவர்பூல் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் நேற்று லிவர்பூலில் உள்ள அன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக, மாட்ரிட்டில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் சுற்று போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இதனால், சொந்த மண்ணில் லிவர்பூல் அணி கம்பேக் தரும் என்ற எதிர்பார்ப்போடு அவர்களது ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். இதைத்தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்திலேயே ஈடுபட்ட லிவர்பூல் அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன.
குறிப்பாக, லிவர்பூல் அணியின் முன்கள வீரர்களான ஃபிர்மினோ, சாடியோ மானே ஆகியோர் அடித்த பல ஷாட்டுகளை அத்லெடிகோ மாட்ரிட் அணியின் கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் சிறப்பாக தடுத்தார். இருப்பினும், ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜார்ஜினோ விஜ்னால்டியம் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அசத்த முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதியில் மீண்டும் லிவர்பூல் அணி ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் அவர்களால் கோல்கீப்பர் ஜான் ஒப்லாக்கை கடந்து கோல் அடிக்க முடியாமல் திணறினர். ஆட்டத்தின் 94ஆவது நிமிடத்தில் ஃபிர்மினோ கோல் அடிக்க, லிவர்பூல் அணி கோல் அடிப்படையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.