தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இந்திய அணியின் துர்கா' பெம்பெம் தேவி - பெம்பெம் தேவி

கால்பந்து ஆண்களின் விளையாட்டு என பார்க்கப்பட்ட காலத்தில், பெண்களும் இவ்விளையாட்டில் சாதனை படைக்க இயலும் என கிட்டத்திட்ட இரு தசாப்தங்கள் இந்திய மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடி, இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதைப்பெற்று சாதித்தவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஒய்னம் பெம்பெம் தேவி. வரும் 8ஆம் தேதி, உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அவர் குறித்த சிறப்புக்கட்டுரையினைக் காண்போம்.

Celebrating Oinum Bembem Devi, the 'Durga' of Indian Football
Celebrating Oinum Bembem Devi, the 'Durga' of Indian Football

By

Published : Mar 4, 2020, 6:17 PM IST

இந்தியாவில், தான் சார்ந்த துறைகளில் உள்ள தடைகளை தினந்தோறும் கடந்து முன்னேறி வரும் பெண்களுக்கு தனது அர்ஜுனா விருதை சமர்ப்பணம் செய்கிறேன் என்ற கண்ணிய பேச்சினால் அனைத்து தரப்புப் பெண்களும் கால்பந்து விளையாட்டில் தங்களது தடத்தைப் பதிக்க வழிவகுத்தவர் 'இந்திய அணியின் துர்கா' என அழைக்கப்பட்ட வீராங்கனை, ஒய்னம் பெம்பெம் தேவி.

இந்தியாவிலுள்ள மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரத்தில் 1980ஆம் ஆண்டு பிறந்த ஒய்னம் பெம்பெம் தேவி, கால்பந்து விளையாட்டு ஆண்களின் விளையாட்டாக இருந்த காலத்தில் பெண்களாலும் இவ்விளையாட்டில் சாதிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிவர். அதன் விளைவாக தனது 11ஆம் வயதிலேயே தான் பிறந்த மணிப்பூர் மாநிலத்தின் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் கால்பந்து பிரிவில் விளையாடி, தனது பயணத்தைத் தொடங்கிய தேவி, அன்றிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை, தனது மாநில அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக வலம் வந்தார்.

இந்திய அணியின் துர்கா

பின் தனது 13ஆவது வயதில் மணிப்பூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தேவி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் தேசிய அணிக்காக விளையாடத்தொடங்கினார். ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்துத் தொடருக்கான, இந்திய அணியில் தேர்வாகி அசத்தினார்.

பின் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய மகளிர் அணி நேபாள அணியைத் தவிர ஜப்பான், வடகொரியா, உஸ்பேகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் படுதோல்வியைத் தழுவியிருந்தது.

1997ஆம் ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்திய அணி ஜெர்மனிக்குச் சென்று ஒரு மாத கால பயிற்சியை மேற்கொண்டது. அங்கு அவர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சிகொடுத்த பின் ஜெர்மனி அணிகளுடன் இந்திய அணி மோதியது. அந்தப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்களது திறமையை நிரூபித்தது.

ஒய்னம் பெம்பெம் தேவி

1997ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கானத் தொடரில் ஜப்பானிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் குவாம் அணியுடனான போட்டில் 10-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் 2003ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படத் தொடங்கிய தேவி 2010, 2012, 2014 ஆகிய மூன்று தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய அணிக்காக தலைமை தாங்கி, பெற்றுத்தந்தார்.

மேலும் 2010, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு, தனது தலைமையில் தங்கப்பதக்கத்தையும் பெற்று கொடுத்து தனக்கென ஒரு தனி அந்தஸ்தைப் பெற்றார். பின் 2016ஆம் ஆண்டுடன் அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்த தேவி, 2017ஆம் ஆண்டு ஈஸ்டர்ன் ஸ்போர்டிங் யூனியன் அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார்.

தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தேவி

பின் அதே ஆண்டிலேயே இந்திய அரசால் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜூனா விருதை வழங்கி, இந்திய அரசு கவுரவித்தது. இந்தவிருதைப் பெறும் போது அவர் கூறிய வார்த்தைகள் தான் 'இந்தியாவில், தான் சார்ந்த துறைகளில் உள்ள தடைகளை தினந்தோறும் கடந்து முன்னேறி வரும் பெண்களுக்கு எனது அர்ஜுனா விருதை சமர்ப்பணம் செய்கிறேன்’ என்பது.

அர்ஜூனா விருதுடன் பெம்பெம் தேவி

அதன்பின் 2018ஆம் ஆண்டு 17 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியின் துணைப்பயிற்சியாளராக தற்போது வரை செயல்பட்டு வரும், இவருக்கு இந்தாண்டு இந்தியா அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் அளித்து கவுரவித்தது.

இதன் மூலம் கால்பந்து விளையாட்டில் இவ்விருதை பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெம்பெம் தேவி பெற்றார்.

விருதுகள் பட்டியல்:

ஆண்டு விருதுகள்
2003 AIFF-ன் ஆண்டின் சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை
2013 AIFF-ன் ஆண்டின் சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை
2017 அர்ஜூனா விருது
2020 பத்மஸ்ரீ விருது

இதையும் படிங்க:'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

ABOUT THE AUTHOR

...view details