ஜெர்மன் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான பன்டஸ்லீகா தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (டிச.17) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெயர்ன் முனிச் அணி, வுல்ப்ஸ்பர்க் அணியை எதிர்கொண்டது.
முதல் பாதியில் கடும் போட்டி:
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் அட்டாக்கிங் ஆட்டத்தை கையிலெடுத்தனர். இதன் பயணாக ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்திலேயே வுல்ப்ஸ்பர்க் அணியின் பிலிப் கோலடித்து அசத்தினார்.
இதையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி ஆட்டத்தின் 45+1ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.
வெற்றிக்கு உதவிய லெவாண்டோவ்ஸ்கி:
இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்திய லெவாண்டோவ்ஸ்கி, ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் கோலடித்து, அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தார்.
அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி வுல்ப்ஸ்பர்க் அணியால் கோலடிக்க முடியாததால், ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வுல்ப்ஸ்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சாதனை படைத்த லெவாண்டோவ்ஸ்கி:
இந்த ஆட்டத்தின் போது பெயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி தனது முதல் கோலை பதிவு செய்த போது, பன்டஸ்லீகா கால்பந்து வரலாற்றி 250 கோல்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னதாக, ஜெர்மன் அணியின் ஜெர்ட் முல்லர் (365) முதலிடத்திலும், கிளாஸ் பிஷ்ஷர் (268) இரண்டாமிடத்திலும் உள்ளனர். இதன் மூலம் பன்டஸ்லீகா கால்பந்து தொடரில் 250 கோல்களை அடித்த முதல் ஐரோப்பியர் அல்லாத கால்பந்து வீரர் என்ற சாதனையை போலாந்து அணியின் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி படைத்துள்ளார்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான தேதி அறிவிப்பு!