17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். 2017இல் இந்தியாவில் நடைபெற்ற இந்தத் தொடரை இங்கிலாந்து அணி வென்று அசத்தியது. தற்போது இந்த ஆண்டுக்கான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வந்தது.
இந்தத் தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையிலிருந்த பிரேசில் அணி, இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து கம்பேக் தந்தது. இதனால், பிரேசில் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டியில் மெக்சிகோவை எதிர்கொண்டது.
பிரேசில் - மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரை பிரேசில் அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடையே எழுந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இப்போட்டியிலும் பிரேசில் அணி சூப்பர் கம்பேக் தந்தது. மெக்சிகோ வீரர் பிரயன் அலன்சோ 66ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதன்பின், ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், பிரேசில் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை சிறப்பாகப் பயன்படுத்திய பிரேசில் வீரர் கையோ ஜார்ஜ் கோலாக்கினார். இதனால், ஆட்டம் 1-1 என்று சமநிலையில் வர, போட்டி சூடுபிடித்தது. போட்டி 90 நிமிடங்கள் எட்டிய நிலையில், இரு அணிகளுக்கும் கூடுதலாக ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்டதால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டி முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், சப்ஸ்டிட்டியூட் வீரராக களமிறங்கிய பிரேசில் வீரர் லசாரோ வினிசியஸ் மார்கஸ் மேட்ச் வின்னிங் கோல் அடித்தார். இதனால், பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி நான்காவது முறையாக 17 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
உலகக்கோப்பையை வென்ற பிரேசில்
இதற்கு முன் இவ்விரு அணிகள் இறுதியாக 2005ஆம் ஆண்டு, பெருவில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில்தான் மோதின. அதில், மெக்சிகோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரேசில் அணி அதற்கு பழிதீர்த்துகொண்டுள்ளதாக தெரிகிறது.