தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சீரி ஏ: கடைசி இடத்திலிருந்த அணியிடம் அடிவாங்கிய அட்லாண்டா - ஸ்பால் - அட்லாண்டா

சீரி ஏ கால்பந்து தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ஸ்பால் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் ஐந்தாவது இடத்திலிருக்கும் அட்லாண்டா அணி தோல்வி அடைந்துள்ளது.

Bottom-placed SPAL stun Atalanta 2-1 in comeback win in Serie A
Bottom-placed SPAL stun Atalanta 2-1 in comeback win in Serie A

By

Published : Jan 21, 2020, 9:59 PM IST


இத்தாலியில் நடைபெறும் நடப்பு சீசனுக்கான ’சீரி ஏ’ கால்பந்துத் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்த அட்லாண்டா அணி, கடைசி இடத்திலிருந்த ஸ்பால் அணியை எதிர்கொண்டது. அட்லாண்டா அணியின் சொந்த மண்ணான பெர்கோவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்கும் முனைப்பில் அட்லாண்டா அணி விளையாடியது.

இதன் பலனாக ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் அட்லாண்டா அணியின் முன்கள வீரர் ஜோசிப் இலிசிச் (Josip Illicic) கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய ஸ்பால் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு நூலளவில் நழுவியது. ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் ஸ்பால் அணியின் ஃபார்வர்டு வீரர் ஆண்ட்ரே பெடக்னா ஹெட்டர் முறையில் அடித்த பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்றதால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அட்லாண்டா அணி முன்னிலை பெற்றிருந்தது.

கடைசி இடத்திலிருந்த அணியிடம் அடிவாங்கிய அட்லாண்டா

இதையடுத்து இரண்டாம் பாதி தொடங்கியவுடன், ஸ்பால் அணியின் முன்கள வீரர் செர்ஜியோ ஃபிளோகரி மாற்றுவீரராக களமிறங்கினார். இதனையடுத்து ஸ்பால் அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. குறிப்பாக, செர்ஜியோ ஃபிளோகரியின் பாஸை சிறப்பாக பயன்படுத்தி ஆண்ட்ரே பெடக்னா ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இதையடுத்து, ஸ்பால் அணியின் நடுகள வீரர் மட்டியா வலோட்டி ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் மூன்று அட்லாண்டா வீரர்களை கடந்து மிரட்டலான கோல் அடித்தார். இதனால், அட்லாண்டா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பால் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், கடைசி இடத்திலிருந்த ஸ்பால் அணி இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று டிரா, 13 தோல்வி என 15 புள்ளிகளுடன் 18ஆவது இடத்தை பிடித்துள்ளது. மறுமுனையில், அட்லாண்டா அணி 20 ஆட்டங்களில் 10 வெற்றி, ஐந்து டிரா, ஐந்து தோல்வி என 35 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிங்க:ரொனால்டோவின் உதவியால் வெற்றிபெற்ற யுவென்டஸ்!

ABOUT THE AUTHOR

...view details