ஐஎஸ்எல்: ஈசாலா கப் நம்தே... பெங்களூரு சாம்பியன்ஸ்!
ஈசாலா கப் நமதே என கூறிவரும் பெங்களூரு அணி ரசிகர்கள் கொண்டாடுவதற்கு கிடைத்த ஒரே கோப்பை ஐஎஸ்எல் மட்டுமே. 2018-19 சீசன்களுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்.சி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐ லீக்: சென்னை சிட்டியின் முதல் கோப்பை
இந்தியாவிலுள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான 2018-19 சீசனுக்கான ஐ லீக் சாம்பியன் பட்டத்தை சென்னை சிட்டி எஃப்சி அணி முதல்முறையாக வென்று அசத்தியது. ஆனால், இந்த வெற்றியை ருசிக்க சென்னை அணிக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டுவந்ததால், சென்னை சிட்டி எஃப்சி அணிக்கு பரிசு தொகை ரூ. 1 கோடியை 100 நாட்களுக்கு பின்னரே வழங்கியது.
ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்தியர் நியமனம்!
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏஎஃப்சி கால்பந்து பொதுக்குழுக் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், ஃபிஃபா கால்பந்து கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பில் பிரஃபுல் படேல் 46 வாக்குகளில் 38 வாக்குகளைப் பெற்று உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வானார்.
இதன்மூலம், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினராக இந்தியர் ஒருவர் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். ஆசிய கண்டத்தில் இருந்து ஃபிஃபா கவுன்சில் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினர்களில் பிரஃபுல் படேலும் ஒருவர்.
கடலில் கரைந்த கால்பந்து வீரரின் பயணம்
2019ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா உயிரிழந்தது கால்பந்து ரசிகர்களை கண்கலங்கச் செய்தது. ஸ்ட்ரைக்கராக பிரான்ஸின் நான்டிஸ் கிளப் அணிக்காக விளையாடி வந்த இவரை வேல்ஸின் கார்டிஃப் அணி 17 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்தது. தனது புதிய பயணத்தை நோக்கி கார்டிஃப் செல்வதற்காக நான்டிஸிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி பைலெட்டுடன் சென்ற இவரது விமானம் திடீரென மாயமானது.
விமானம் மாயமாவதற்கு முன் எனக்கு பயமாக இருக்கிறது என வாட்ஸ்அப்பில் தனது தந்தைக்கு அவர் ஆடியோ மெசேஷ் அனுப்பியுள்ளார். இவரைக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி இவரது உடலை கடற்படையினர் isle of portland தீவில் மீட்டெடுத்தனர். விமானத்தில் கார்பன் மோனாக்சைடு வெளியேறியாதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சலாவின் உடல் கிடைத்தபோதிலும், 57 வயதான விமானி டேவிட் இபோட்சனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. எமிலியானோ சலாவின் மரணம் பல கோடி கால்பந்து ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அவர் உயிர்பிரிந்து மூன்று மாதங்களுக்குப் பின் அவரது தந்தை ஹொராசியோ சலா மாரடைப்பு காரணத்தால் உயிரிழந்தார். எமிலியானோ சலாவின் மரணத்திற்கு இன்றளவும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
சொந்த மண்ணில் இரண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில்!
கோப்பா அமெரிக்கா:
கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து தொடரை பொறுத்தவரையில் பிரேசில் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. முதலில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பின் தங்களின் 9ஆவது கோப்பா அமெரிக்கா பட்டத்தை ருசித்தது. இந்தத் தொடர் பிரேசில் அணிக்காகவே செட் செய்யப்பட்டது என அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி பேசியது சர்ச்சையானது.
17 வயது உலகக்கோப்பை:
சீனியர்கள் சாதித்ததைப் போலவே ஜூனியர் அணியும் தங்களது சொந்த மண்ணில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அசத்தியது. காமாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு கோல் பின்தங்கிய நிலையிலிருந்த பிரேசில் அணி, ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி நான்காவது முறையாக இந்தத் தொடரை வென்றது.
2014இல் ஃபிபா உலகக் கோப்பையை நழுவ விட்டதை கடந்த ஆண்டில் கோப்பா அமெரிக்கா, 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை என இரண்டு கோப்பைகளை வென்று சரிசெய்து கொண்டது பிரேசில் அணி
ஒருபக்கம் தடை... மறுபக்கம் ஹாட்ரிக் சிக்சர்! மெஸ்ஸி ஸ்ட்ரைக்ஸ்!
கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராக திகழும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸிக்கு 2019ஆம் ஆண்டு சர்ச்சைகள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது.
14 ஆண்டுகளுக்குப் பின் ரெட் கார்ட் வாங்கிய மெஸ்ஸி
முதலில் பிரேசிலில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் அணிக்காக மேட்ச் ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக மெஸ்ஸி தெரிவித்தார். அவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரேசில் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சிலி அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர், 14 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது ரெட் கார்ட் பெற்றார். இப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற பின்தான் மேற்கூறிய கருத்தை அவர் தெரிவித்தார். மெஸ்ஸியின் இந்தக் கருத்துக்கு கோப்பா அமெரிக்கா கால்பந்து சம்மேளனம் அவருக்கு மூன்று மாதம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்தது.
விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட மெஸ்ஸி