ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் பீரிமியர் கால்பந்து தொடரின் ஐந்து சீசனின் இறுதிப் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது . இதில், பெங்களூரு எப்சி அணி, எப்சி கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்காக கடுமையாக முயற்சித்தினர். இருப்பினும் அவர்களுக்கு வழங்பட்ட 90 நிமிடங்களில் கோல் அடிக்க தவறியதால், முதலில் 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அதிலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்காததால், பின் மீண்டும் 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதனிடையே, எப்சி கோவா வீரர் அகமது செய்த தவறால் நடுவர் அவருக்கு ரெட் கார்டு வழங்கினார். இதனால், 10 வீரர்கள் கொண்ட அணியுடன் இறுதி 15 நிமிடத்தில் விளையாட வேண்டிய நிலையில் கோவா அணி தள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதிக்கட்டமான 118வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கார்னர் கிக் வழங்கப்பட்டது. இதை அந்த அணியை சேர்ந்த ராகுல் பெகே ஹெட்டர் முறையில் கோல் அடித்து அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் எப்சி கோவா அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் பெங்களூரு அணி ஐஎஸ்எல் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்று அசத்தியுள்ளது.