கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் ஒவ்வொரு சீசன்களிலும் உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய அணிகளின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில், 2018-19 சீசனில் உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய அணிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், 2017-18 சீசனில் அதிக வருவாய் ஈட்டிய ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியின் சாதனையை முறியடித்து பார்சிலோனா அணி 841 மில்லியன் யூரோக்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 ஆயிரத்து 633 கோடி ஆகும்.
இதன் மூலம் பார்சிலோனா அணி, ஒரு சீசனில் 800 மில்லியன் யூரோக்களை சம்பாதித்த முதல் அணி என்ற சாதனையை படைத்து, உலகின் பணக்கார கிளப் அணியாக விளங்குகிறது. மேலும், பார்சிலோனா அணியின் 2017-18 சீசனின் வருவாயை உடன் ஒப்பிடுகையில் 2018-19 சீசனின் வருவாய் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது.