நடப்பு சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதன் நாக் அவுட் போட்டியின் முதல் சுற்றில் அத்லெடிக்கோ மாட்ரிட் - நடப்பு சாம்பியன் லிவர்பூல் ஆகிய அணிகள் மோதின.
இப்போட்டி அத்லெடிக்கோ மாட்ரிட் அணியின் சொந்த மைதானமான மாட்ரிட்டில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் அத்லெடிக்கோ மாட்ரிட் அணிக்கு கார்னர் கிக் வழங்கப்பட்டது. அப்போது லிவர்பூல் அணியின் டிஃபெண்டர்கள் பந்தை தடுக்கத் தவறியதால் அதனைப் பயன்படுத்திக் கொண்ட அத்லெடிக்கோ மாட்ரிட் வீரர் சவுல் நிகாஸ் கோலாக மாற்றினார்.
இதைத்தொடர்ந்து, லிவர்பூல் அணி பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடினாலும் அவர்களால் அத்லெடிக்கோ மாட்ரிட் அணியின் டிஃபெண்டர்களை கடந்து கோல் அடிக்க முடியவில்லை. லிவர்பூல் அணி எட்டு ஷாட்டுகளை அடித்திருந்தும் அவை எதுவும் ஆன் டார்கெட்டுக்கு செல்லவில்லை.