ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரின் ஆறாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில், பெங்களூரில் நடைபெற்ற முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில், பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவின் ஏடிகே அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் 5’ஆவது நிமிடத்திலேயே பெங்களூரு அணியின் குருனியன் கோலடித்து கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
ஆனால் சற்றும் தளராமல் கொல்கத்தாவின் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 30’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்புக்கு வழிவகை செய்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் வீதம் சமநிலையில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியின் டேவிட் வில்லியம்ஸ், ஆட்டத்தின் 63’ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்து அசத்தினார்.
பின் ஆட்டத்தின் 79’ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்த வில்லியம்ஸ், கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து ஆட்டத்தின் மீதமிருந்த நிமிடங்களில் கொல்கத்தா அணி தங்களின் டிஃபென்ஸ் பிரிவை வலுப்படுத்தி, பெங்களூரு அணியை கோலடிக்காமல் தடுத்து நிறுத்தியது.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. மேலும் அண்மையில் நடந்த முதல் போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தாலும், இன்று நடைபெற்ற மதிப்பீட்டு ஆட்டத்தின் கோல்கணக்குகள் அடிப்படையில் கொல்கத்தா அணி 3-2 என்ற கோல்கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மேலும், வருகிற 14ஆம் தேதி கோவா நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள ஆறாவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், சென்னையின் எஃப்சி அணி, கொல்கத்தாவின் ஏடிகே அணியுடன் நேருக்கு நேர் மோதவுள்ளது. ஏற்கெனவே இவ்விரு அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் தலா இரு கோப்பைகளை வென்றுள்ளதால், மூன்றாவது கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்ற பரபரப்பு இப்போதே ரசிர்கள் மத்தியில் அனலாய் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் கால்பந்து: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி!