கோவிட்-19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட இத்தாலியில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இத்தாலியின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான ரோமா அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தாங்களாகவே முன்வந்து, நான்கு மாத ஊதியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
இது குறித்து ரோமா அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக ரோமா அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் என தங்களது நான்கு மாத ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர். அதேபோல் மற்ற ரோமா ஊழியர்கள் நிதி ரீதியாக அதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் உண்மையில் நாம் அனைவரும் ஒன்றாக உள்ளோம் என்பதை நிரூபித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளது.
இதனால் ரோமா அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாத ஊதியத்தை இத்தாலியின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இப்பெருந்தொற்றின் காரணமாக இந்தாண்டு இத்தாலியில் நடைபெறயிருந்த ‘சிரி ஏ’, ஐரோப்பிய கோப்பை ஆகிய கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதைஇயும் படிங்க: ஒரு ரசிகனாக அவரை டி20 உலக்கோப்பைத் தொடரில் காணவிரும்புகிறேன் - ஸ்ரீகாந்த்!