இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஒரு காலத்தில் சாம்பியன் அணியாக திகழ்ந்த ஆர்செனல் அணி தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 1996 முதல் 22 ஆண்டுகளாக ஆர்செனல் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆர்சென் வெங்கரின் பதவிக்காலம் 2018 மே மாதத்தில் முடிந்தவுடன், அந்த அணியின் பயிற்சியாளராக உனாய் எமிரி நியமிக்கப்பட்டார். ஆனால், அவரால் ஆர்சென் வெங்கரைப் போல ஆர்செனல் அணியை கட்டமைக்க முடியவில்லை.
குறிப்பாக, ஆர்செனல் அணி நடப்பு இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (இ.பி.எல்.) சீசனில் விளையாடிய 13 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்தது. அதேசமயம், நடப்பு சீசன் யூரோப்பா போட்டியில் ஆர்செனல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் என்டிராச்ட் ஃபரங்ஃபர்ட் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், எமிரி ஆர்செனல் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் ஆர்செனல் விளையாடிய 78 போட்டிகளில் 43 வெற்றி, 16 டிரா, 19 தோல்வியை சந்தித்திருந்தது.