பிரேசில்: தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி ரியோடி ஜெனிரோ மைதானத்தில் நேற்று (ஜூலை 10) நடந்தது. இதில் நடப்பு ஆண்டு சாம்பியன் பிரேசில், அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
அர்ஜென்டினா லீக் சுற்றில் சிலி, உருகுவே, பாராகுவே, பொலிவியா நாடுகளை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் ஈக்வெடார் அணியை 0-3 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.
அரையிறுதியில் கொலம்பியா அணியுடன் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா டை செய்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பெனால்டி சூட்அவுட்டில் கொலம்பியா அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.
பிரேசில் அணி, லீக் சுற்றில் மூன்று வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து கால்இறுதியில் சிலியையும் (1-0), அரைஇறுதியில் பெருவையும் (1-0) தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இறுதி ஆட்டம்
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டீ பால் தன்னிடம் இருந்து பந்தை ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். அப்போது மரியா, பிரேசில் வீரர் எடர்ஸனை லாவகமாகத் தாண்டி பந்தை தூக்கி அடித்து கோலாக்கினார். இதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.
அதன்பின் அர்ஜென்டினா அணி தடுப்பாட்டத்தைக் கையாண்டபோது, பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முயன்ற வாய்ப்புகளை தகர்த்தனர். இரண்டாவது பாதியிலும் பிரேசில் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றும், அர்ஜென்டினா வீரர்கள், அவர்களை தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தனர்.