இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்செனல் எஃப்சி அணி - வெஸ்ட் போர்ம் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்செனல் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சிறப்பாக செயல்பட்ட கீரன் டைர்னி ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்திலும், புக்கயோ சாகா ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்திலும் கோலடித்து அர்செனல் அணியை முன்னிலைப்படுத்தினர்.
இதன்மூலம் முதல்பாதி ஆட்டநேர முடிவில் அர்செனல் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்செனல் எஃப்சிக்கு அலெக்ஸாண்ட்ரே லாகசெட் ஆட்டத்தின் 60 மற்றும் 64ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.