இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஹெச் பிரிவில் நேற்று லண்டனில் உள்ள ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தின் அஜாக்ஸ் அணி, இங்கிலாந்தின் செல்சீ அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட ஃப்ரீகிக்கை செல்சீ வீரர் டேமி ஆப்ரஹாம் தடுக்க முயன்றார். ஆனால், அது செல்ஃப் கோலாக மாற, அஜாக்ஸ் அணி இரண்டாவது நிமிடத்திலேயே கோல் ஸ்கோரைத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, கவுன்டர் அட்டாக் ஆட்டத்தில் செல்சீ அணி ஈடுபட்டது. நான்காவது நிமிடத்தில் செல்சீ வீரர் கிறிஸ்டியன் புலிசிக்கை அஜாக்ஸ் அணியின் டிஃபெண்டர்கள் ஃபவுல் செய்தனர். இதனால், செல்சீ அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியை அந்த அணியின் வீரர் ஜார்ஜின்ஹோ கோலாக்கினார். நான்கு நிமிடத்திலேயே இரு அணிகளும் செய்த தவறால் தலா ஒரு கோல் பதிவானது.
இதையடுத்து, இரு அணிகளும் தொடர்ந்து அட்டாக்கிங் முறையிலேயே ஆடினர். இருப்பினும் 20ஆவது நிமிடத்தில் அஜாக்ஸ் வீரர் ஸியேச்சின் (Ziyech) க்ராஸை, சக வீரர் ப்ரோமெஸ் (Promes)ஹெட்டர் முறையில் அசத்தலான கோல் அடித்தார். அதன்பின், 35ஆவது நிமிடத்தில் அஜாக்ஸ் வீரர் ஸியேச் அடித்த கார்னர் கிக் ஷாட், செல்சீ கோல்கீப்பர் கெப்பா மீது பட்டு கோலுக்குச் சென்றது. இதனால், முதல் பாதியிலேயே அஜாக்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியிலும் இரு அணிகள் வழக்கம் போல ஆக்ரோஷமான ஆட்டத்திலேயே ஈடுபட்டனர். 55ஆவது நிமிடத்தில் அஜாக்ஸ் வீரர் வான் டி பீக் (Van de Beek) கோல் அடிக்க அஜாக்ஸ் அணியின் கோல் ஸ்கோர் நான்கானாது. இதனால், நிச்சயம் அஜாக்ஸ் அணிதான் இப்போட்டியில் வெற்றிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், அந்த அளவிற்கு அந்த அனி டிஃபெண்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி செல்சீ அணியின் பல ஷாட்டுகளை தடுத்து நிறுத்தியது.
அதேசமயம், ஆட்டம் முடிய 30 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், செல்சீ அணி மூன்று கோல்கள் அடித்து இப்போட்டியை டிரா செய்யாதா என்ற ஏக்கம் அந்த அணியின் ரசிகர்களுக்குத் தோன்றியது. இந்த நிலையில், செல்சீ வீரர் சீசர் 63ஆவது நிமிடத்தில் மிரட்டலான கோல் அடித்து அணிக்கு நம்பிக்கைத் தந்தார்.