கரோனா பெருந்தொற்றுக் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றன. மேலும் இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டும், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும் உள்ளன.
இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், இந்தியாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களான ஐஎஸ்எல், ஐ-லீக், இரண்டாம் பிரிவு கால்பந்து அணிகளைக் கொண்டு ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப் தொடரை இந்தாண்டு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்சமயம் உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தின் போது, ஃபுட்சல் கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் முதலாவது சீசன் திட்டமிட்டப்படி தொடங்கப்படும் என்றும், ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறுவதாக இருந்த இத்தொடர் தற்போது செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.