கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதில், குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருந்த முக்கிய கால்பந்து தொடர்கள் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால், விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கால்பந்து சம்மேளனம் 2020-21ஆம் ஆண்டின் சீசனுக்கான தேதிகளை இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஏஐஎஃப்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சீசன் தேதிகள் மற்றும் 2020-21ஆம் ஆண்டிற்கான பதிவு கால அட்டவணை ஆகியவற்றுக்கு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) ஒப்புதல் அளித்திருப்பதை நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதன்படி, 2020-21 சீசன் ஆகஸ்ட் 1 முதல் 2021 மே 31 வரை இருக்கும் என்றும், இதில் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை கோடைகாலத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் நடத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டியே இந்தியாவில் விளையாடிய கடைசி கால்பந்து போட்டியாகும். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் ஏடிகே அணி சென்னையின் ஏஃப்சி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.