இத்தாலியில் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சீரி ஏ கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஏ.சி. மிலன் அணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 2000த்தின் ஆரம்பக்கால கட்டத்தில் ஐரோப்பாவில் மற்ற அணிகளுக்கு ஏ.சி.மிலன் அணி அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. குறிப்பாக, 2006-07 சீசனில் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. ஆனால், தற்போதைய ஏ.சி. மிலன் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் அந்த அணி 1-3 என்ற கோல் கணக்கில் ஃபியோரென்டினா (Fiorentina) அணியுடன் படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஏ.சி.மிலனிற்கு இது நான்காவது தோல்வியாகும். இதன்மூலம், சீரி கால்பந்து வரலாற்றில் 81 வருடங்களுக்குப் பிறகு ஏ.சி.மிலன் அணி விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் நான்கில் தோல்வி அடைவது இதுவே முதல்முறை.