இந்தியாவில் கேரளாவும் மேற்கு வங்கமும் கால்பந்திற்கு பெயர்பெற்ற மாநிலங்களாகும். இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து அவர் போலவே ஃப்ரீகிக் கோல் அடித்தார்.
கோல் போஸ்டின் இடது முனையில் வைக்கப்பட்டிருந்த வளையத்தின் நடுவே அவர் ஃப்ரீகிக் கோல் அடித்ததுதான் அச்சிறுவனின் ஸ்பெஷாலிட்டியே. கோல் அடித்த பிறகு அதை மெஸ்ஸி ஸ்டைலில் கொண்டாடி மகிழ்ந்தார். கால்பந்து பயிற்சிகளில்கூட இதுபோன்று துல்லியமாக கோல் அடிப்பது மிகவும் கடினமாகும்.
ஆனால், கடினமான விஷயத்தை இச்சிறுவன் தனது அசாத்தியமான திறனால் எளிதாக்கினார். இந்த வீடியோவை அவரது சகோதரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். பின் இவரது திறனைக் கண்டு வியந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா இவர் மெஸ்ஸி போல கோல் அடிக்கும் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, இந்தக் காணொலி வைரலானது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் கேரளாவின் குட்டி மெஸ்ஸி என அழைக்கப்படும் இச்சிறுவன் மிஷல் அபுலிஸ், மலப்புரம் மாவட்டம் மம்பாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மம்பாத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார்.