கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் 15 ஆண்டுகளை நிறைவு செய்தால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் தொடங்கி, ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருப்பார், அந்த வீரர். ஆனால், இந்திய அணிக்காக கால்பந்தில் 15 ஆண்டுகள் நிறைவு செய்தால், பலருக்கும் அவரின் பெயர் தெரியுமா என்பது சந்தேகமே.
'சூப்பர் கேப்டன்' என கால்பந்து ரசிகர்களால் அழைக்கப்படும் சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக அறிமுகமானது 2005ஆம் ஆண்டு. அன்றிலிருந்து இன்று வரை இந்திய அணிக்காக 115 போட்டிகள், 72 கோல்கள். சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோவுக்கு பிறகு, சுனில் சேத்ரி தான்.
இந்திய கால்பந்து அணியின் மகுடம் சுனில் சேத்ரி சமீபத்தில் அவரின் 34ஆவது பிறந்தநாளன்று, ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பாக 'ஆசியன் ஐகான்' என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தனது இளம் வயதிலேயே கால்பந்துப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய இவர், 2002ஆம் ஆண்டில் மோகன் பகான் அணிக்காகவும், ஜேசிடி அணிக்காகவும் 21 போட்டிகளில் பங்கேற்று 48 கோல்களை அடித்தார். அதையடுத்து மேஜர் லீக் சாக்கர் தொடரின் கன்சாஸ் சிட்டி அணிக்காகவும் ஆடினார்.
பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு வந்த சுனில் சேத்ரி, ஐ லீக் கால்பந்துத் தொடரில் சிராக் மற்றும் மோகன் பகான் அணிகளுக்காக ஆடத்தொடங்கினார். இவரது வருகைக்கு பிறகு இந்திய கால்பந்து அணி 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நேரு கோப்பையையும், 2011ஆம் ஆண்டு எஸ்ஏஎஃப்எஃப் கோப்பையையும் கைப்பற்றியது. பெரும் சாதனையாக கடந்த 27 ஆண்டுகளில் ஏஎஃப்சி ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்ற இந்திய அணி தகுதிபெற்றது.
இவருக்கு இந்திய அரசு சார்பாக 2011ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2018ஆம் ஆண்டு ஏஎஃப்சி ஐகான் விருதும், 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், அதே ஆண்டில் டெல்லி கால்பந்து சங்கம் சார்பாக கால்பந்து ரத்னா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.