ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இடதுகை பேட்ஸ்மேன் ரியான் பர்ல் (27). இவர் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள், 18 ஒருநாள் போட்டிகள், 25 டி20 போட்டிகளை விளையாடியுள்ளார். இவர் தனது கிழிந்த காலணிகள், அதை ஒட்ட வைக்கும் பசைகள், கருவிகள் ஆகியவற்றை இன்று (மே 23) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அத்துடன்,"ஏதாவது ஒரு வாய்ப்பில் எங்களுக்கு ஸ்பான்சர் கிடைக்கும்பட்சத்தில், நாங்கள் ஒவ்வொரு தொடர்களுக்கும் பின்னர் எங்களின் காலணிகளை ஒட்டவைக்கத் தேவையில்லை" என கண்ணீர் எமோஜியுடன் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டுக்குப் பின்னர், பிரபல பூமா நிறுவனம் தனது உதவிக்கரத்தை ரியானுக்கு நீட்டியுள்ளது. பூமா கிரிக்கெட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காலணியை ஒட்டும் பசையைத் தூக்கி எறியுங்கள். நாங்கள் இருக்கிறோம்" என ரியான் ட்வீட்டுக்குப் பதிலளித்துள்ளது.
ஜிம்பாப்வே அரசாங்கத்தின் தலையீடு காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்தது. மேலும், அந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தகுதிப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இருப்பினும், ஜிம்பாப்வே அணி மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் கரோனா தொற்று காரணமாக அவர்களின் பெரும்பாலான சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. அதில், 2020 ஆகஸ்ட் மாதம் இந்தியா சுற்றுப்பயணமும் உள்ளடக்கம் தான்.
ஸ்பான்சர்ஷிப், ஒளிபரப்பு உரிமைகள் ஆகியவற்றின் மூலம் பெரும் பணம் புழங்கும் கிரிக்கெட்டிலும், ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதை ரியானின் ட்வீட் உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. ரியானின் ட்வீட்டை முன்வைத்து ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மல்யுத்த வீரரைச் சுற்றிவளைத்தத் தனிப்படை... சுஷில் குமார் கைது!