தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2023ல் இந்திய அணிக்கு வந்த சோதனை.. ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்திய சம்பவம்.. ! - ஷமி

2023 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ௬ விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது, இந்திய ரசிகர்கள் மற்றும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, அதைப் பற்றியதே இந்த தொகுப்பு.

2023 odi world cup
2023 odi world cup

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 10:47 PM IST

ஹைதராபாத்: 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுகிறது என்ற செய்தியைக் கேட்டவுடனேயே இம்முறை உலகக் கோப்பை இந்தியாவுக்குத் தான் என அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மனக்கணக்கு போடத் தொடங்கினர்.

அரையிறுதிக்குச் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் வரும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் முதல் அனைவரும் எதிர்பார்ப்பே அதுவாகத்தான் இருந்தது. ஆனால் நடப்பு சாம்பியனாக இந்தியாவுக்கு வருகை தந்த இங்கிலாந்து அணி தொடரின் இறுதியில் 7வது இடத்தில் நிறைவு செய்தது.

அதே சமயம் எவரும் துளிகூட எதிர்பாராத தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றின் முடிவில் 2 தோல்விகளை மட்டுமே சந்தித்து அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது. ஆனால் வழக்கம் போல் அரையிறுதியில் சொதப்பி தொடரை விட்டு வெளியேறியது.

மறுபக்கம் பல தடுமாற்றத்துடன் தொடரைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, இறுதிப் போட்டி வரை முன்னேறி இந்திய அணியை 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது 6வது கோப்பையைத் தட்டி சென்றது. இந்த சம்பவம் இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 10 ஆண்டு ஐசிசி கோப்பையின் வறட்சியைப் போக்கி விடலாம் என்ற ரோகித் சர்மாவின் கனவை உடைத்தெறிந்தனர் அஸ்திரேலிய வீரர்கள்.

பல்வேறு வியூகங்களுடன் இந்திய அணி:சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடரை விளையாடுவதால் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் எனப் பல திட்டங்களை வகுத்து தொடரைத் தொடங்கியது. அதற்கேற்ப அணியும் லீக் சுற்றில் ஒரு தோல்விகளைக் கூட தழுவாமல் நாகவுட் சுற்றுக்குச் சென்றது.

2023 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து அணி நிர்வாகம் இந்திய அணியை ஆசிய கோப்பைக்கு முன்பு இருந்தே தயார்ப்படுத்தி வந்தது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய தொடர்களில் கவனம் செலுத்தவும், உடற்தகுதி காரணமாகவும் ஆசியக் கோப்பைக்கு முன் பல போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது.

அதேசமயம் ஜஸ்பிரீத் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்ததால் அணிக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. கிட்டதட்ட 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு சிறந்த அணியாக இந்த அணி உருவாகி இருந்தது. இதுவே இந்திய அணியின் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எனலாம்.

ஆக்ரோஷமான தொடக்கம் தந்த ரோகித் சர்மா:ஹிட்மேன் எனச் செல்லமாக அழைக்கப்படும் ரோகித் சர்மா, இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களின் மனநிலையையும் புரிந்து கொண்டு வழிநடத்தியது மட்டுமல்லாமல், தனது பேட்டிங்கிலும் அதிரடியைக் காட்டினார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை முதல் போட்டியில் டக் அவுட் ஆனாலும், அதன் பின் விளையாடிய போட்டிகள் அனைத்திலுமே ரோகித் சர்மா தனது ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இவர் முதல் 10 ஓவர்களில் சராசரி 135.02யுடன் 402 ரன்களை விளாசி எதிர் அணி பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்குக் கொண்டு சென்றார். இவரது அணுகுமுறை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் அளிக்காமல் நிதானமாக அணிக்கு நல்ல ஸ்கோர்களை சேர்க்க உதவியது.

ஒரு பக்கம் ரோகித் சர்மா அதிரடியைக் காட்டினாலும், அணியின் இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னால் நிதானமாகவும் செயல்பட்டு அணிக்கு ரன்களை சேர்க்க முடியும் என்பதையும் நிரூபித்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அணியின் பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவே அந்த போட்டியில் நிதானத்தின் மூலம் அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 101 பந்துகளில் 87 ரன்கள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி:இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தினாலும், மறுபக்கம் விராட் கோலியின் மீதும் பல பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அதைச் சிறப்பாகச் செய்தாரா என்றால் கண்டிப்பாகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

தொடரின் தொடக்கம் முதலே அவரது ஆதிக்கம் இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து தவித்த போது கிரீஸ்-க்குள் இருந்த விராட் கோலி, நிதானத்தின் வழியே அந்த போட்டியை வென்று கொடுத்தார்.

அதன் பின் 3 சதங்கள், 6 அரைசதங்கள் என மொத்தம் 11 இன்னிங்ஸில் 765 ரன்களை குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் நிறைவு செய்தார். விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கால் அணிக்கு ரன்களை குவித்தாலும், மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா - முகமது ஷமி:உலகக் கோப்பையின் தொடக்க முதலே 5வது பவுலராக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். சில போட்டிகளில் முக்கிய விக்கெட்களை கைப்பற்றித் தந்த ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பாராத விதமாக வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது, கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

அதனால் ஹர்திக் பாண்டியாவால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதால், அணி தனது வியூகத்தை மாற்றி அமைக்கும் சூழல் ஏற்பட்டது.

அப்போது தான் இந்திய அணி முகமது ஷமிக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முகமது ஷமி தனது பந்து வீச்சால் எதிர் அணியை கலங்கடிக்கச் செய்தார். மூன்று 5 விக்கெட்கள் உட்பட அவர் 7 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்தி தொடரின் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் ஆனார்.

மறுபக்கம் ஜஸ்பிரீத் பும்ரா தனது கட்டுப்பாடான பந்து வீச்சால், மற்ற பந்து வீச்சாளர்களுக்கு உதவினார். இவர் 11 இன்னிங்ஸில் 20 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் தொடரில் 4வது அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் ஆனார்.

ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்திய சம்பவம்:ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலமே இந்திய அணி 10 ஆண்டுக்கால கோப்பை வறட்சியைப் போக்கும் எண்ணத்தில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியைச் சந்தித்தது. இருப்பினும் வெற்றிக்குப் பயன்படுத்தும் வழக்கமான டெம்பளேட் இந்தியாவுக்கு அன்று சரியாகச் செயல்படவில்லை.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு மைதானத்தில் களம் மிகவும் கடினமாக இருந்தது. ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினாலும், அதன் பின் ஆட்டத்தின் வேகம் குறைந்தது. இந்திய அணியால் 240 ரன்களையே எட்ட முடிந்தது. `

அதன் பின் பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழக்கச் செய்தனர். ஆனால் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. பும்ரா மற்றும் முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினாலும், அணியின் மற்ற பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறினர்.

இறுதி வரை சென்று இந்திய அணி தனது சொந்த மண்ணில் கோப்பையைத் தவற விட்டது இந்திய ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணியின் வீரர்கள் மத்தியிலும் பெரும் துயரமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2023: இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details