லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது.
நேற்று மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் முன்னிலையுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய நாளை சிராஜ் பந்தில் கிரீன் பவுண்டரியுடன் துவக்கினார். உமேஷ் யாதவ் ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபூஷேனே 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேரி கீரினுடன் சேர்ந்து வேகமாக ரன்கள் சேர்த்தார்.
அதே நேரத்தில் இந்திய பவுலர்கள் பவுன்சர்களாக வீசினர். சிராஜ் வீசிய பவுன்சர் கிரீன் வகது தோள்பட்டையை பதம் பார்த்தது. இதனையடுத்து ரோகித் ஜடேஜாவை பந்துவீச அழைத்தது பெரும் பலன் கிடைத்தது. ஜடேஜா வீசிய பந்தில் 25 ரன்கள் எடுத்திருந்த கிரீன் போல்டானார். அதே நேரத்தில் கேரி ஒரு பக்கம் பவுண்டரிகளாக அடித்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டார்க் கேரிக்கு நல்ல கம்பெனி கொடுக்க ஆஸ்திரேலியா அணியின் முன்னிலை மளமளவென எகிறியது.
ஷமி ஓவரில் ஸ்டார்க் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதே ஓவரில் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலியா அணி அப்போது 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அப்போது ஆஸ்திரேலியா அணியில் அலேக்ஸ் கேரி (66), கம்மின்ஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.