டெல்லி: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அனைத்திலுமே வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திலிருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தாலும், கோலி மற்றும் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் சரியான தொடக்கத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில், தனக்குண்டான பாணியிலேயே ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 131 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிரான 86 ரன்கள், வங்கதேசத்திற்கு எதிராக 48 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்கள் என இதுவரையில் 311 ரன்கள் குவித்து, நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டமாக வரும் 29ஆம் தேதி லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு நிகழ்வில், அணியில் உள்ள அனைவரையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.