டெல்லி: இண்டர்நேஷ்னல் கிரிக்கெட் கவுன்சில், இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இதன்படி, வருகிற அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த அட்டவணையின்படி, 2023 உலகக்கோப்பை தொடரை அக்டோபர் 5 அன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து (2019) அணி உடன் இறுதிப் போட்டியாளராக ஆடிய நியூசிலாந்து முதல் லீக் ஆட்டத்துடன் தொடங்குகிறது. இந்த போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது.
மேலும், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி உடன் தொடங்குகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஆனால், இந்தியா உடனான லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக ஐசிசி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் லீக் ஆட்ட கால அட்டவணை:
- அக்.8 இந்தியா Vs ஆஸ்திரேலியா - சென்னை
- அக்.11 இந்தியா Vs ஆப்கானிஸ்தான் - டெல்லி
- அக்.15 இந்தியா Vs - பாகிஸ்தான் - அகமதாபாத்
- அக்.19 இந்தியா Vs பங்களாதேஷ் - புனே
- அக்.22 இந்தியா Vs நியூசிலாந்து - தர்மசாலா
- அக்.29 இந்தியா Vs இங்கிலாந்து - லக்னோ
- நவ.2 இந்தியா Vs குவாலிபையர் 2 - மும்பை
- நவ.5 இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா
- நவ.11 இந்தியா Vs குவாலிபையர் 1 - பெங்களூரு
இவ்வாறு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆட்டங்கள் சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு மற்றும் கொல்கத்தா உள்பட 10 இடங்களில் நடைபெறுகிறது.
மேலும், 10 அணிகள் இந்த கோப்பைக்கான போட்டியில் உள்ளது. அவற்றில் 8 அணிகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில், மீதம் உள்ள 2 அணிகள் ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல், இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவிலும், இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன.
அதேநேரம், இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகள் உடன் ஒரு முறை பலப்பரீட்சையை எதிர்கொள்ளும். இதன் அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதையும் படிங்க:ashes2023: கம்மின்ஸ் அபார ஆட்டத்தில் முதல் டெஸ்டில் போராடி வென்றது ஆஸ்திரேலியா!