புனே: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 30வது லீக் ஆட்டம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்ன களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தைக் கொடுக்க முடியாத இந்திய ஜோடி 22 ரன்கள் எடுத்த போது பிரிந்தது. திமுத் கருணாரத்ன 15 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் பதும் நிசங்கா - குசல் மண்டீஸ் கூட்டணி சிறிது நேரம் நீடித்து நிதானமான முறையில் அணிக்கு ரன்களை சேர்த்தது. அரைசதத்தை நெருங்கிய பதும் நிசங்கா 46 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.
குசல் மண்டீஸ் 39, சதீர சமரவிக்ரம 36, சரித் அசலங்கா 22, தனஞ்சய டி சில்வா 14, ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்களும், முஜிப் உர் ரகுமான் 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.